;
Athirady Tamil News

அதிகரிக்கும் பேரழிவு அபாயம் ; கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

0

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் நேற்று (30) காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா, ஆஸ்திரேலியா, சிலி, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடார், மெக்சிகோ, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா, வட கொரியா உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா, ஆஸ்திரேலியா, உள்பட பல நாடுகள் தீவுகளுக்கு எச்சரிக்கை
ரஷ்யாவின் பெட்ரோ பாவ்லோவ்ஸ்க் – கம்சாட்ஸ்கில் இருந்து சுமார் 136 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.8-ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடற்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது. அங்கு சுமார் 4 மீட்டர்(13 அடி உயரம்) வரை அலைகள் எழுந்தன. ரஷ்யாவின் குரில் தீவுகளின் பரமுஷிர் தீவில் உள்ள செவெரோ – குரில்ஸ்க் கடலோரப் பகுதியைத் சுனாமி கடுமையாக தாக்கியுள்ளது. குரில் தீவுகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளன.

கம்சட்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவு, அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகள் மற்றும் பசிபிக் பெருங்கட லின் பிற பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதில் ரஷ்யாவின் நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ பகுதியை தாக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அங்கு சுமார் 2 அடி உயரத்தில் அலைகள் ஏற்பட்டன. அதேபோல் இஷினோமாகி பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கின.

அங்கு சுமார் 1.6 அடி உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டுள்ளது. ஹொக்கைடோவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் வேகமாக தாக்கியுள்ளன.

வடக்கு ஹொக்கைடோவில் உள்ள ஹமனகா நகரம் மற்றும் ஜப்பானின் பிரதான தீவில் உள்ள இவாட்டில் உள்ள குஜி துறைமுகத்தை 2 அடி உயர சுனாமி அலைகள் அடைந்தன என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை களைத் தாக்கக்கூடும் என்றும், ஒசாகாவிற்கு அருகிலுள்ள வகயாமா வரை தெற்கே சுனாமி அலை தாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரத்தில் வசிக்கும் சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஹொக்கைடோ முதல் தெற்கில் ஒகினாவா வரையில் 133 நகராட்சிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு பிறகு அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் இருந்து வடக்கு நோக்கி ஓரிகான், வாஷிங்டன், பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும், தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பம் வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் 4 மணி நேரத்தில் கலிபோர்னியாவை தாக்க கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அலாஸ்கா கடற்கரையில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதற்கிடையே ஜப்பான்-ஹவாய் இடையே உள்ள மிட்வே அட்டோல் பகுதியில் 6 அடி அளவிலான அலைகள் எழும்பியுள்ளது.

சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உட னடியாக தகவல்கள் வெளியாகவில்லை. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுனாமி எச்சரிக்கையை அடுத்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் கூறும் போது, கலிபோர்னியா, அமெரிக்காவின் பிற மேற்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் ஹவாயில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆகவே கடலோர பகுதி மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு இந்தோ னேசியாவின் சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அதே அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் உலகில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் முதல் 10 இடத்துக்குள் தற்போது கம்சட்சா தீபகற் பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமும் உள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.