;
Athirady Tamil News

யாழ்.செம்மணி புதைகுழியில் குழந்தையை அரவணைத்தவாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடு

0

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளின் அகழ்வுகள், பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி பல வருடங்களாக உறவினர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தும் நிலையில், வடக்கு கிழக்கில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் குறித்து எதிர்பார்ப்புக்களும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்று 25 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது எதிர்பாராத வகையில், சிறிய என்புக் கூடு ஒன்றை மற்றுமொரு என்புக்கூடு கட்டியணைத்தப்படி இருக்கும் என்புக்கூட்டுத்தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் 04 என்புக்கூடுகள் சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து வெளிப்பட்டன.

இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில் 115 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.

இதேவேளை திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஆறாம் திகதி இந்த விசேட கூட்டத்தை நடத்துமாறு மூதூர் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொல்பொருள் திணைக்களம், தடயவியல் பிரிவினர், சட்ட வைத்திய அதிகாரி,புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், குற்றவியல் பிரிவினர், தேசிய நிலக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், காவல்துறையினர் ஆகியோர், நீதவான் தலைமையில் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில், இதன்போது தீர்மானிக்கவுள்ளனர்.

முன்னதாக, திருகோணமலை சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் ஜூலை 19 ஆம் திகதி அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு உள்ளிட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.