வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி, 9 பேர் மாயம்!
சீன தலைநகர் பெய்ஜிங்கில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது, 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
பெய்ஜிங்கில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் காணாமல் போயுள்ளனர். கடுமையான மழையால் சாலைகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கில் அதிகாரிகள் முழுமையான பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
பெய்ஜிங்கின் வடக்கு மலை மாவட்டங்களான மியுன் மற்றும் யாங்கிங்கில் அதிகளவில் இறப்புகள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை முதல் தலைநகர் பெய்ஜிங்கில் கனமழை பெய்து வருகின்றது. சீனாவின் சில பகுதிகளைப் பாதிக்கும் கனமழையால் ஏற்படும் வெள்ளம் மற்றும் புவியியல் பேரழிவுகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் உயிர்கள், சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் திங்கள்கிழமை முன்னதாக உத்தரவிட்டார்.
பெய்ஜிங் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அதே நேரத்தில் மழையால் 31 சாலைகள் சேதமாகியுள்ளன. 136 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.