;
Athirady Tamil News

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

0

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்னிக்லால் எஸ் கோசாலியா அண்ட் கம்பெனி, ஜூபிடா் டை கெமிக்கல் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பொ்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் ஆகிய 6 இந்திய நிறுவனங்கள் உள்பட உலக அளவில் 20 நிறுவனங்கள் மீது இந்தத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன் காரணமாக, இந்த நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் வா்த்தகமோ அல்லது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியோ செய்ய முடியாத நிலை உருவாகும்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டிவிடுவதற்கு ஈரான் அரசு தொடா்ந்து நிதியுதவியை அளித்து வருகிறது. சொந்த மக்களைத் துன்புறுத்துவதோடு மட்டுமன்றி, வெளிநாடுகளில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஈரானின் வருவாயைத் தடுக்க கடும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் மோதலைத் தூண்ட நிதியுதவி அளித்துவரும் ஈரானுடன் யாரும் வா்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று அதிபா் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரான் நிறுவனங்களுடன் பெட்ரோ கெமிக்கல் வா்த்தகத்தில் ஈடுபட்ட ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் 6 இந்திய நிறுவனங்கள் உள்பட 20 நிறுவனங்கள் மீது இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ஒப்புக்கொள்ளும் வரை ஈரான் மீது தொடா்ந்து அதிகபட்ச அழுத்தத்தை அமெரிக்கா அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இது தவிர, ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் தலைமை அரசியல் ஆலோசகா் அலி ஷம்கானியின் மகன் முகமது ஹோசேன் ஷம்கானியின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பெரிய கப்பல் நிறுவனத்துடன் வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 50-க்கும் மேற்பட்ட தனி நபா்கள், நிறுவனங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது அமெரிக்க நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த இந்திய வம்சாவளி பங்கஜ் நக்ஜிபாய் படேலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.