;
Athirady Tamil News

தொடருந்து கழிப்பறையில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் மீட்பு

0

கொழும்பு மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346-இன் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் நேற்று (01) பெண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் வயது சுமார் மூன்று நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று காலை புத்தளத்திலிருந்து கல்கிசைக்கு வந்த ரயில் எண் 8346, பயணத்தை முடித்து மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

ரயிலைச் சுத்தம் செய்யச் சென்ற தொழிலாளர்கள் குழு, மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கவனித்து, சோதனை செய்தபோது, கழிப்பறையில் ஒரு பையில் சுற்றப்பட்டிருந்த பெண் சிசுவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொழிலாளர்கள் உடனடியாக தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதில், சிசுவின் வயது மூன்று நாட்கள் எனவும், தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இருப்பதையும் கண்டறிந்தனர்.

இதனால், இந்தப் பிரசவம் வைத்தியசாலையில் நடைபெறவில்லை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிசு வைக்கப்பட்டிருந்த பை, DUTY FREE பை என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அது டுபாயைச் சேர்ந்தது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அளுத்கம நீதவான் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, சிசுவின் உடலையும் ரயில் பெட்டியையும் ஆய்வு செய்தார். பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.