யாழ்ப்பாணத்தில் ‘ஒற்றுமையின் நெடும்பயணம்’ செயற்திட்டம் தொடக்கம்: கிளீன் ஸ்ரீலங்கா குழுவினர் வருகை
” இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்” எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர் புகையிரதம் மூலம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான தசூன் உதார ,துலீப் சேமரத்தன மற்றும் சாரதா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , மாவட்ட செயலர் ம பிரதீபன் , புகையிரத நிலைய அதிபர் பிரதீபன், பிரதேச செயலர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகையிரதத்தில் வந்தோரை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து புகையிரதத்தில் வந்த குழுவினரால் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கான தொலைக்காட்சி பெட்டியொன்றையும் அன்பளிப்பு செய்தனர்.
கிளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக நாளைய தினம் வியாழக்கிழமை, பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் நடமாடும் சேவையை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை , உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் உடுவில் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
இவ் நடமாடும் சேவையில் ஆட்பதிவுச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவைகள், ஓய்வூதியச் சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சேவைகள், மோட்டார் வாகனப் பதிவுகள், கம்பனிப் பதிவுகள், சுகாதார சேவைகள், ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள், வடக்கு மாகாணத்தின் சகல அமைச்சிற்குரிய சேவைகள், பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய சேவைகள் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி செயலகம், வடக்கு மாகாண சபை, மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் என்பன இணைந்து இவ் நடமாடும் சேவையினை ஒழுங்குபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









