;
Athirady Tamil News

இந்தியா மீதான வரியே புடின் பேச்சுக்கு வரக் காரணம்! டிரம்ப்

0

இந்தியா மீதான வரி விதிப்பே ரஷிய அதிபர் விளாதிமீர் புடின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷியா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ரஷிய அதிபரும் டிரம்ப்பும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதுதொடர்பாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

”எல்லாவற்றுக்கு ஒரு எதிர்வினை இருப்பதாக நான் நினைக்கிறேன். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் ரஷியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் அடிப்படையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

சீனா, இந்தியா என இரண்டு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இவர்களை இழக்கும் நிலை ஏற்பட்டதால், ரஷியாவிடம் இருந்து அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ரூ. 3.50 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதித்திருந்த டிரம்ப், ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக கூடுதலாக 25 சதவிகிதம் என மொத்தம் 50 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.

இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ. 3.50 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதையடுத்து ரஷியாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறைப்பது குறித்த பேச்சுகள் எழுந்தன.

இருப்பினும், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் எனத் தெரிவித்திருந்தார்.

புடினுக்கு எச்சரிக்கை

பேச்சுவார்த்தையில் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் விளாதிமீா் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷியா கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே பல முறை அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். அப்போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்படி பேசிவிட்டு வீடு திரும்பினால், அங்கு புடின் பொதுமக்கள் மீது புதிதாக நடத்தும் தாக்குதல் குறித்த செய்தி கிடைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் நான் சொல்வதை புதின் கேட்பாா் என்று எனக்குத் தோன்றவில்லை என டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.