;
Athirady Tamil News

இந்தியாவுடனான வா்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு: டிரம்ப் குற்றச்சாட்டு

0

இந்தியாவுடனான வா்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘இந்தியா தனது வரிகளை முற்றிலுமாக குறைக்க முன்வந்துள்ளது. ஆனால், இது மிகவும் தாமதமான முடிவு’ என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா அமெரிக்காவுக்கு அதிகப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஏற்றுமதி செய்கிறது.

இந்த ஒருதலைப்பட்ச வா்த்தக உறவு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா விதிக்கும் அதிக வரிதான். இது மற்ற எந்த நாட்டையும் விட அதிகம். இதனால், நமது வணிகங்கள் இந்தியாவில் பொருள்களை விற்க முடியாமல் தவிக்கின்றன. இது ஒரு பெரிய வா்த்தகப் பேரழிவு.

மேலும், இந்தியா தனது எண்ணெய் மற்றும் ராணுவத் தேவைகளுக்கு பெரும்பாலும் ரஷியாவைச் சாா்ந்திருக்கிறது. அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைவாகவே கொள்முதல் செய்கிறது. இந்தியா இப்போது தனது வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க முன்வந்துள்ளது. ஆனால், இது மிகவும் தாமதமான முடிவு. பல ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும். இவை மக்கள் சிந்திப்பதற்கான எளிய உண்மைகள்’ எனக் குறிப்பிட்டாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ள நிலையில் டிரம்ப்பின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில், இரு நாடுகளின் வா்த்தகம் 13,180 கோடி டாலராக இருந்தது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி 8,650 கோடி டாலராகவும், இறக்குமதி 4,530 கோடி டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.