;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி வாகனத் தரிப்பிடத் தடையால் வர்த்தகம் பாதிப்பு – நடவடிக்கை எடுக்க வணிகர் கழகம் வலியுறுத்தல்!

0

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களை முற்றாக தடை செய்தமை தொடர்பாக யாழ் வணிகர் கழகம் யாழ் மாநகர சபை முதல்வருக்கு அதிருப்தி வெளியிட்டது.

யாழ் ஆஸ்பத்திரி வீதியில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களை முற்றாக தடை செய்தமை தொடர்பாக யாழ் வணிகர் கழக செயலாளர் சி.சிவலோகேசன், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், கடந்த மாதம் 16ம் திகதியன்று உங்களுடனும் மாநகர சபை உறுப்பினர்களுடனும் யாழ் வணிகர் கழக பணிமனையில் நகர அபிவிருத்தி மற்றும் நகரத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தோம். அதற்கமைய நாங்கள் சமர்ப்பித்த 15 விடயங்களையும் தாங்கள் கூடிய விரைவில் அமுல்படுத்துவதாக எல்லோர் முன்னிலையிலும் வாக்குறுதி அளித்திருந்தீர்கள். ஆனால் நாங்கள் சமர்ப்பித்த விடயங்களுக்காக நகரத்தில் இன்று வரை நீங்கள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. இவற்றிற்கு மாறாக வர்த்தகர்களுக்கு எதிராகவும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் முகமாகவும் தங்கள் நடவடிக்கைகள் எடுப்பதாக நாங்கள் உணர்கின்றோம்.

அந்த வகையில் கடந்த முதலாம் திகதியில் இருந்து யாழ் ஆஸ்பத்திரி வீதியில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இது வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கையை பாதிப்படைய செய்கிறது. அத்தோடு வீதியில் வாகனங்கள் தரித்து நிற்பதற்கு எவ்வகையான ஒழுங்கமைப்புக்களும் செய்து கொடுக்காமல் யாழ் மாநகர சபையானது வாகனங்கள் வீதியில் தரித்து நிற்பதை முற்றாக தடை செய்வது வர்த்தகர்களின் உரிமையை பறிக்கும் செயலாக மாறுகின்றது.

அத்தோடு வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்குமென வீதியின் மத்தியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வேறு வாகனங்கள் தரித்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

என்னும் அதனைக் கூட தாங்கள் கண்காணிக்காமலும் வாகனங்கள் தரித்து நிற்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளாமலும் வாகனங்கள் தரித்து நிற்பதை தடை செய்வது வர்த்தகர்களின் செயற்பாடுகளுக்கு முரணாக இருக்கின்றது.

இவ்விடயத்தை ஆட்சேபித்து சுமார் 40 இற்கு மேற்பட்ட யாழ் ஆஸ்பத்திரி வீதி வர்த்தகர்கள் கையொப்பமிட்டு எமக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதனுடைய மூலப்பிரதி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் உடனடியாக வாகனங்கள் தரித்து நிற்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களின் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் வழமை போல் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், யாழ் ஆஸ்பத்திரி வீதியில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கின் தரிப்பிடங்களை முற்றாக நடை செய்தமை தொடர்பாக கலந்துரையாட வேண்டி இருப்பதனால் ஆஸ்பத்திரி வீதி வர்த்தக பிரதிநிதிகளும், யாழ் வணிகர் கழக பிரதிநிதிகளும் தங்களை உடனடியாக சந்தித்து விரிவாக கலந்துரையாட எண்ணியுள்ளோம். ஆகவே தாங்கள் அதற்குரிய நேரத்தை ஒதுக்கி எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ் மாநகர சபையின் ஆணையாளருக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.