;
Athirady Tamil News

அற்புதன் , மகேஸ்வரி , ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பி யினரே .. – முன்னாள் உறுப்பினர் தெரிவிப்பு

0

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர், படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் , அது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்க தயாராகவுள்ளேன் என ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,,

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தே வேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வேளை 15 – 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு , நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் ஒரு 13 வயதுடைய சிறுவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெடி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சுட்டு கொன்று விட்டார்கள்.

அதன் பிறகு நாங்கள் நெடுந்தீவு பிரதேசத்தை கைப்பற்றினோம். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகஸ்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர். அவர் தான் நேரில் வர மாட்டேன் என கூறியதும் அவரை அடித்து சித்திரவதை செய்த வேளை , அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டனர்.

டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாவலராக இருந்தவரை புலிகளுடன் தொடர்பு என கொலை செய்தனர். நெல்லியடியை சேர்ந்த சட்டத்தரணி மகேஸ்வரியை கொலை செய்தனர். தம்முடன் முரண்பட்ட ரமேஷ் என்கிற தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை கொலை செய்தனர். அந்த கொலைகளை புலிகள் செய்ததாக கூறினார்கள். ஆனால் புலிகள் அவர்களை கொலை செய்யவில்லை. இவர்களே கொலை செய்தனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டு தாபனத்தின் பணியாளர் கே.எஸ் ராஜா என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கை அழைத்து வந்து தமது ஊடக பணிகளுக்காக வைத்திருந்தனர். அவரும் இவர்களுடன் முரண்பட்ட போது , காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் மதுபானத்தினத்திற்குள் சைனட் கலந்து கொடுத்து அவரை படுகொலை செய்தனர்.

மலையகத்தை சேர்ந்த மோகன் மற்றும் விஜி எனும் இருவரையும் கொலை செய்தனர். அவர்களை மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொசுக்கினார்கள்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து , கடற்கரையில் அவரின் உடலை போடும் போது அப்பகுதி மக்கள் கண்ணுற்று அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தமையால் உடலை போட வந்தவர்களை அந்நேரம் பொலிஸார் கைது செய்திருந்தனர்

ஈ.பி.டி.பி க்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொலைகள் நடைபெற்றன. இந்த படுகொலைகளுக்கு சாட்சியங்களாக நான் இருக்கிறேன்.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் , உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் , துணிந்து சாட்சி சொல்ல நான் தயார் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.