விவசாயியிடம் 10 பன்றித் தலைகளை வாங்கிய நபர்கள்: பின்னர் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள்
பிரான்சில், விவசாயி ஒருவரிடம் 10 பன்றித் தலைகளை வாங்கியுள்ளார்கள் இருவர். அதைத் தொடர்ந்து பிரான்சின் பல பகுதிகளில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நிகழ்ந்தன!
ஒன்பது மசூதிகள்…
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில், பாரீஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றிற்கு காலை தொழுகைக்கு வந்த சிலர், மசூதி வாசலில் ஒரு அதிரவைக்கும் காட்சியைக் கண்டார்கள்.
ஆம், இரத்தம் சொட்டச் சொட்ட காணப்பட்ட பன்றி ஒன்றின் தலை மசூதி வாசலில் வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல், நீல எழுத்துக்களில் ‘ மேக்ரான்’ என எழுதப்பட்டிருந்தது.
அந்த மசூதியின் நிர்வாகியான Najat Benaliக்கு தகவல் செல்ல, அவர் அங்கு விரைய, சிறிது நேரத்துக்குள், அங்கு மட்டுமல்ல, பிரான்சிலுள்ள ஒன்பது மசூதிகளின் முன் இதே விரும்பத்தகாத விடயம் நடந்துள்ளது தெரியவந்தது.
CCTV காட்சிகளால் கண்டுபிடிக்கப்பட்ட விடயம்
உடனடியாக பொலிசார் தீவிர விசாரணையில் இறங்க, பல்வேறு இடங்களில் உள்ள CCTV கமெராக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
கமெராக்களில் பதிவான காட்சிகள், செர்பியா நாட்டு லைசன்ஸ் பிளேட் கொண்ட ஒரு காரில் பயணிக்கும் இரண்டுபேர், மசூதிகள் முன் பன்றித்தலைகளை போட்டுவிட்டு, அதை புகைப்படமும் எடுத்துக் கொள்வதைக் காட்டின.
மேலதிக விசாரணையில், அந்த இரண்டுபேரும், செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, திங்கட்கிழமை இரவு, நார்மண்டியிலுள்ள ஒரு விவசாயியை அணுகி, அவரிடமிருந்து 10 பன்றித்தலைகளை வாங்கியது தெரியவந்தது.
அடுத்த நாள், அவை பிரான்சிலுள்ள பல மசூதிகளின் முன் வைக்கப்பட்டிருந்தன.
பிரான்ஸ் மக்களிடையே பிரிவை உண்டாக்க அந்த நபர்கள் இதைச் செய்துள்ளதாக கூறும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இருவரும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விரும்பத்தகாத சம்பவம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மசூதியின் நிர்வாகியான Najat Benaliக்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
அவரை அழைத்த பல்வேறு மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஒரு இஸ்லாமியர் தாக்கப்பட்டாரானால், அது நாங்கள் எல்லோரும் தாக்கப்பட்டதற்கு சமம், அவர்கள் நம்மை ஒருவருக்கொருவர் எதிராவானர்களாக நிறுத்துவதன் மூலம் நம்மைப் பிரிக்க விரும்புகிறார்கள், ஆனால், அது தவறு, அவர்கள் நினைப்பது நடக்காது என தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார் Najat Benali.