;
Athirady Tamil News

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

0

டென்மார்க் அரசின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தின் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் தலைநகர் நூக்கிற்கு சென்றுள்ளார்.

கிரீன்லாந்தின் பூர்வீக மக்களான இனுயிட் பழங்குடியினருக்கு எதிராக, டென்மார்க் அரசு கடந்த 1960 முதல் 1992 ஆம் ஆண்டு வரை கட்டாய கருத்தடை திட்டங்களை நடத்தி வந்தது.

இனுயிட் பழங்குடியினரின் மக்கள் தொகையைக் குறைக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்தத் திட்டங்களினால், 30 ஆண்டுகளில் சுமார் 4,500 இனுயிட் பெண்களின் கருப்பைக்குள் கருத்தடை சுருள் உள்ளிட்டவை கட்டாயப்படுத்தி பொருத்தப்பட்டன.

இதனால், பெரும்பாலான பெண்கள் நிரந்தரமாகவே குழந்தைகள் பெறும் தன்மையை இழந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துடன், இனுயிட் பெற்றோரிடம் இருந்து அவர்களது குழந்தைகள் வலுக்கட்டாயமாக டென்மார்க் அதிகாரிகளால் பறிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் இனுயிட் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்டார். மேலும், தங்கள் மீது திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடு கோரி டென்மார்க் அரசுக்கு எதிராக சுமார் 150 இனுயிட் மக்கள் ஒன்றிணைந்து வழக்குத் தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்.22 ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். இத்துடன், டென்மார்க் தலைநகர் நூக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று (செப். 24) இனுயிட் மக்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என டென்மார்க்கின் முன்னாள் பிரதமர்கள் கூறி வந்தனர். ஆனால், பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா கைபற்ற வேண்டுமென அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதால் ஏற்பட்டுள்ள அழுத்ததினால் மட்டுமே அவர் மன்னிப்பு கேட்பதாக பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.