;
Athirady Tamil News

உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!

0

காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், உடனடியாகப் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் காஸாவினுள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய மற்றும் வடக்கு காஸாவில் நேற்று (செப். 27) இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், நுசைராத் அகதிகள் முகாமில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் கொல்லப்பட்டதாக, அங்கு செயல்படும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அரசுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதையடுத்து, ஐ.நா.வின் பொது அவைக் கூடத்தில், நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையைத் துவங்கியதுடன் சுமார் 50-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இருப்பினும், மீதமிருந்த ஒரு சிலரது முன்னிலையில் பேசிய பிரதமர் நெதன்யாகு, காஸாவில் ஹமாஸுக்கு எதிரான தங்களது வேலைகளை நிச்சயமாக முடித்தாக வேண்டும் எனக் கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.