;
Athirady Tamil News

“சொல்லில் அல்ல, செயலில் நிரூபிக்கிறது”: குறிகாட்டுவான் வீதி, இறங்குதுறை மறுசீரமைப்பு தொடக்கம் – வடக்கு ஆளுநர் புகழாரம்!

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ் ‘குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின்’ ஆரம்ப நிகழ்வும மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் இன்று சனிக்கிழமை காலை (04.10.2025) நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஆளுநர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளருடன் கதைக்கும்போது அடிக்கடி ஓர் விடயத்தைக் கூறுவார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில் வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அது உண்மை.

நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச் சிறப்பான தருணம். இந்த அரசாங்கம் சொல்லில் அல்ல செயலில் நிரூபித்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன.

பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது எமது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக முதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்படும், என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

வீதி அபிவிருத்திப் பணி 299 மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம், 800 மில்லியன் ரூபா செலவில் குறிகாட்டுவான் இறங்குதுறையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. அத்துடன், குறிகாட்டுவான் வரையிலான பிரதான வீதியில் 3.2 கிலோ மீற்றர் அடுத்த ஆண்டு புனரமைக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.