உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!
உக்ரைனில் ரயில் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகினார்.
ரஷியா – உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் கீவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது ரஷியா, ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 30 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீட்புப் படையினரும் மருத்துவர்கள் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரஷியாவின் இந்தத் தாக்குதலைக் கண்டித்த உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, “பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிந்தும் தாக்குதல் நடத்துவது என்பது பயங்கரவாதம்; இதனை உலக நாடுகள் ஏற்கக் கூடாது’’ என்று தெரிவித்தார்.
உக்ரைனில் வழக்கமாக குளிர்காலம் நெருங்கும்போது, மின்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வரும்நிலையில், செர்னிஹிவ் அருகே மின் கட்டமைப்புகளை குறிவைத்து, 109 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியது.