ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி
ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உதவியாளர்கள் உடனே நோயாளிகளை கட்டடத்திற்கு வெளியே கொண்டு சென்றனர்.
தகவல் கிடைத்ததும் சிறிது நேரத்திலேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை சுமார் இரண்டு மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, முழு வார்டும் புகை மண்டலமாக காட்யளித்தது. தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தின் எதிர் பக்கத்தில் இருந்த ஜன்னலை உடைத்து தீயை அணைக்க வேண்டியிருந்தது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என 6 நோயாளிகள் பலியாகினர். மருத்துவர் அனுராக் தகாட் கூறுகையில், “பதினான்கு நோயாளிகள் வேறு ஒரு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் வெற்றிகரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்,” என்று தெரிவித்தார்.
தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார். தீ விபத்தில் பல்வேறு ஆவணங்கள், ஐ.சி.யூ உபகரணங்கள், இரத்த மாதிரி குழாய்கள் மற்றும் அந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிற பொருள்களுள் தீயில் எரிந்து நாசமாயின.
இதனிடையே முதல்வர் பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோகரம் படேல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது ஊழியர்கள் ஓடிவிட்டதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.