கலைமகள் கலைக்கூடம் திறப்பு விழாவும்! வாணிவிழாவும்!
கலைமகள் கலைக்கூடம் திறப்பு விழாவும்! வாணிவிழாவும்!
2025/10/04
மேற்படி நிகழ்வுகள் மதியம் 1.30 மணிக்கு வாணி விழா பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து
புதிய கட்டடத் திறப்புவிழா சரியாக 2.30 மணிக்கு ஆரம்பமாகியது. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன் அவர்கள் தவிர்க்க முடியாத காரணமாக நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக தெரிவித்து பதிலாக வேலணை பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலர் திரு.பா பார்த்தீபன் அவர்களை அனுப்பியிருந்தார். முதல் நிகழ்வாக விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த புங்குடுதீவு ஸ்ரீ.கணேசா மகா வித்தியாலய அதிபர் திரு சி.சிவேந்திரன் அவர்களுக்கும் வேலணைப் பிரதேச பதில் பிரதேச செயலர் திரு பா.பார்த்தீபன் அவர்களுக்கும் வட இலங்கை சர்வோதய அறங்காவலர் செல்வி பொ. ஜமுனாதேவி அவர்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விருந்தினர்களாலும் ஆசிரியர், பெற்றோர், மாணவர் ஆகியோரால் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து விருந்தினர்கள் மூவரும் இணைந்து “கலைமகள் கலைக்கூடத்தினை ” மங்கள கரமாக நாடாவை வெட்டித் திறந்து வைத்தனர். தொடர்ந்து கல்வி நிலைய மாணவர்களின் இறை வணக்கத்துடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது. ஆசிரியர் செ.நிலக்க்ஷன் அவர்களின் வரவேற்புரையுடன் தரம் 06 மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆற்றுகை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்வி நிலைய மாணவர்களின் கோலாட்டம், வேப்பிலை நடனம், செம்புநடனம், கரகாட்டம், குழு நடனம், பண்ணிசை, வினாடி – வினா போட்டி, பக்திப் பாடல், நாடகம்,கவிதை,பேச்சு, விவாதம் ஆசிரியர் செ.குகதாஸ் அவர்களின் தத்துவப் பாடல் என மிக நேர்த்தியான முறையில் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தன. நிகழ்வுகளின் இடையே கல்வி நிலையத்தால் நடாத்தப்பட்ட மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல், கோலம் போடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன் விருந்தினர் உரைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து ஆசிரியர் ச.சதீஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் மாலை 5.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.
நன்றி.



















