இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!
இந்தோனேசியாவில் கடந்த வாரம் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜாவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டடம் செப். 29 அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர்.
கடந்த ஒரு வாரக் காலமாக மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை 80 சதவீத இடிபாடுகளை அகற்றி, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்டதாகப் பேரிடர் மீட்பு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. இன்று இறுதிக்குள் தேடுதல் பணி நிறைவடைவதாகப் பேரிடர் மீட்பு அமைப்பின் துணை அதிகாரி புடி இரவான் தெரிவித்தார்.
பள்ளியின் மேற்தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால், அடித்தளம் பாரம் தாங்க முடியாமல் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.