துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!
துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
துருக்கியின், பாலிகேசிர் மாகாணத்தின் சிந்தீர்கி எனும் நகரத்தில் நேற்று முன்தினம் (அக். 27) இரவு 10.48 மணியளவில் (உள்நாட்டு நேரம்) 5.99 கி.மீ. ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, துருக்கியின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால், பல பின்அதிர்வலைகள் ஏற்பட்ட நிலையில் இஸ்தான்புல் நகரத்திலும், புர்சா, மனிசா மற்றும் இஸ்மிர் மாகாணங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிந்தீர்கி நகரத்தில் 3 கட்டடங்கள் மற்றும் 2 அடுக்கு வணிக வளாகம் ஆகியவை சேதமடைந்துள்ளதாக, துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதிர்வலைகளை உணர்ந்தவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி இரவு முழுவதும் சாலைகளில் தஞ்சமடைந்திருந்ததாகவும் பாலிகேசிரின் ஆளுநர் இஸ்மாயில் உஸ்டாக்லு கூறியுள்ளார்.
இருப்பினும், நல்வாய்ப்பாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் எற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பின் அதிர்வுகள் ஏற்படக் கூடும் என அஞ்சப்படுவதால் மக்களைத் தங்கவைக்க அங்குள்ள மசூதிகள், பள்ளிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, டெக்டானிக் தகடுகளின் மிகப் பெரியளவிலான பிளவுக் கோடுகளின் மீது துருக்கி நாடானது அமைந்துள்ளதால்; அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, துருக்கியின் 11 தென்கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 53,000-க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.