வியத்நாமில் வரலாறு காணாத கனமழை: 10 பேர் பலி!
மத்திய வியத்நாமில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை வெள்ளம் வியத்நாம் மாநிலத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான ஹியூ ஹோய் உள்ளிட்ட நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளது.
கடலோர நகரமான டானாங்கில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். வீடுகள், பயிர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை, வெள்ளத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஏகாதிபத்திய தலைநகரான ஹூவில் நீரில் மூழ்கி 5 வயது சிறுமி காணாமல் போனதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன.
திங்கள்கிழமை ஒரேநாளில் மழைப்பொழிவு 42 அங்குலத்தை எட்டியுள்ளது. ஆறுகள் நிரம்பியுள்ளன. இதுவரை இல்லாது அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவாங் நங்கை மாகாணத்தில் 3 பேர் உயிரிழந்தனர். முக்கிய நெடுஞ்சாலையில் 120-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சில வழித்தடங்கள் தடைப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வாகனங்கள் சிக்கி தவிர்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வியட்நாமின் வடக்கு திசையில் உள்ள ஹனோய், தெற்கு திசையில் உள்ள ஹோ சி மின் நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
வியத்நாம் வெள்ள அபாயமிக்க நாடு. குறிப்பாகப் பருவமழைக் காலத்தில் புயலும் வெள்ளமும் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான மக்கள் அதிக வெள்ள அபாயமுள்ள பகுதிகளில்தான் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.