கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்… 2,400 பேர்கள் மீது பாய்ந்த வழக்கு
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் அரசுக்கு எதிராக Gen Z மக்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் தற்போது வழக்குகள் பாய்ந்துள்ளது.
2,400 பேர்கள் மீது வழக்கு
Gen Z மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு பல ஆண்டுகளில் மொராக்கோவில் நடந்த சில அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கிடைத்த அதே ஆதரவை மக்கள் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 2,400 பேர்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது. இதில் 1,473 பேர்கள் நீதிமன்ற விசாரணை எதிர்பார்த்து சிறையில் உள்ளனர்.
ஆயுதமேந்திய கிளர்ச்சி, கடமைகளைச் செய்யும் அரசாங்க அதிகாரியை அவமதித்தல், வன்முறையைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றங்களைச் செய்யத் தூண்டுதல் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
Gen Z 212 என அழைக்கப்பட்ட இளையோர் குழு ஒன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டமானது நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோரை ஆதரவளிக்கத் தூண்டியது. முதலில் சமூக ஊடகத்தில் தொடங்கிய எதிர்ப்பலை, பின்னர் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டமாக வெடித்தது.
விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்புக்கு அரசாங்கம் செலவிடும் அதே வேளையில் சமூக சேவைகளையும் புறக்கணிப்பதை Gen Z 212 அமைப்பு கடுமையாக விமர்சித்தது.
Gen Z 212 கோரிக்கை
அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்திய போதிலும், சில நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறி, மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர், கடைகள் மற்றும் கார்கள் நொறுக்கப்பட்டன.
இந்த நிலையில், நாடு முழுவதும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம் Gen Z மக்களிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதாக உரிமைக் குழுக்கள் விமர்சனம் செய்தன. ஆனால், சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
கைதான அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று Gen Z 212 கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில், 400க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு ஒன்று முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, 34 பேர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.