இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு! ஆப்கனைச் சேர்ந்தவர்தான் காரணம்: பாக். குற்றச்சாட்டு!
இஸ்லாமாபாதில், தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மெஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரத்தில் கடந்த நவ.11 ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தின் வாசலில், தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, சம்பவயிடத்துக்கு விரைந்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இஸ்லாமாபாத் தற்கொலைப்படை குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என அமைச்சர் நக்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று (நவ. 13) அறிவித்துள்ளார்.
இத்துடன், கைபர் பக்துன்குவாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என பாகிஸ்தான் அரசு நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.