அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பேச்சுக்கு வடமாகாண அழகக சம்மேளனம் கடும் கண்டனம்! – இராணுவ சிகை அலங்கார நிலையங்களால் வாழ்வாதாரம் பாதிப்பு
வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
வடமாகாண அழகக கூட்டுறவுச் சமாசங்களின் சம்மேளனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களின் எல்லை பகுதிக்குள் அமைந்துள்ள இராணுவ முகாம், விஷேட அதிரடிப்படை முகாம்,
சிவில் பாதுகாப்பு படையணிமுகாம், பொலிஸ்நிலையம், சிறைச்சாலை ஆகிய பகுதிகளை அண்டிய அல்லது உள்ளடக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்படுகிறது. அதனால் எங்களது அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு எங்களது கட்டுப்பாடுகளும் மீறப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகிறது. பல தடவைகள் அனைவருக்கும் கடிதம் மூலமாக சுட்டிக்காட்டியதோடு நேரடியாகவும் சந்தித்து கலந்துரையாடி குறித்த சிகை அலங்கரிப்பு நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தோம்.
அதற்கமைவாக யாழ்மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள சில சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் இன்றும் பல சிகை அலங்கரிப்பு நிலையங்கள் தொடர்ந்தும் இயங்கி வரும் நிலையில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வட மாகாணத்திலேயே வன்னி பகுதியில் மட்டும் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே இயங்கி வருவதாகவும் இதனை நாங்கள் அல்லது எங்களது பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றத்திலே கேள்வி பாராளுமன்ற உறுப்பினர்களாகிய (சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன்) ஆகியோர் தாங்கள் அரசியல் செய்வதற்காக பொய் கூறுவதாகவும் இதற்கான பொய்யான தகவல்களை நாங்கள் வழங்குகின்றோம் என்ற அடிப்படையில் முழு பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போன்ற வடிவில் அவரது குற்றம் சாட்டப்பட்ட உரையானது அமைந்திருப்பது எங்களது அங்கத்தவர்கள் அவர்கள் சார்ந்த உறவுகளையும் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது என்பதையும் தங்கள் அனைவருக்கும் தெளிவு படுத்துவதோடு இவ்வாறான பதிலுரைகளை ஆற்றும் போது சம்மந்தப்பட்ட தரப்புக்களின் தரவுகளை சரியான முறையில் பெற்று பதிலுரை வழங்கும் பொழுது பாதிக்கப்பட்ட எங்களது பிரச்சினைகளும் சுமூகமாக தீர்க்கப்படுமென திடமாக நம்புகிறோம்.
குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம் இராணுவத்தால் நடாத்தப்பட்டு வருவதுடன்.
வவுனியாவில் பம்பைமடு இராணுவ முகாம், வவுனியா சிறைச்சாலைக்கு முன், இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம் மற்றும் பரிச்சங்குளம் இராணுவ முகாமிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு புன்னைநீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகத்திலும்,
முல்லைத்தீவில் முருகண்டி கால்நடை பயிற்சி கல்லூரியடி இராணுவ முகாம், முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையுள்ள இராணுவ முகாம்,
அக்கராயன் முருகண்டி விஷேட படையணி இராணுவ முகாம் மற்றும் கோப்பாபுலவு கொண்டமடு வீதி
59 ம் படைப்பிரிவினுள் மூன்று சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன்
மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி இலுப்பைக்கடவை மற்றும் திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளத்திலும் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறு இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் குறித்த நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

