;
Athirady Tamil News

டிசெம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம் – அரசாங்க அதிபர் அறிவிப்பு

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (21.11.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு ஓரளவு சீராகவுள்ளதாகவும், ஆனால் இவ்வருடம் இற்றைவரை 1027 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான டெங்கு நோய் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.

மேலும், திண்மக்கழிவகற்றல் தொடர்பாக கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் தொடர்பாக கழிவு முகாமைத்துவம் அவசியம் குறித்தும், அரச திணைக்களங்களால் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்கப்படுவது குறித்து உறுதிப்படுத்தல்கள் அவசியம் குறித்தும், பாடசாலையில் மாணவர்களுக்கு இது தொடர்பாக பழக்கவழக்கம் தேவை எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், டிசெம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்துவதாவும், பிரதேச செயலாளர்கள் தமது பிரிவிற்குரிய தவிசாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சமூகமட்ட அபைப்புக்களையும் ஒருங்கிணைத்து, கிராமங்களை கொத்தணி ரீதியாக பிரித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களையும் ஈடுபடுத்தி வீடுகள், பாடசாலைகள், அரச தனியார் நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் களத்தரிசிப்புக்கள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், திண்மக் கழிவகற்றலில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றியதுடன் முன்னேச்சரிக்கை மற்றும் தடுக்கும் வழிவகைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார் கள்.

இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.