;
Athirady Tamil News

யாழ் நீச்சல் தடாகம் புனரமைப்பு: குழப்பம் காரணமாக அமைச்சர் வெளியேற்றம்!

0

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார்.

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் மீளவும் குறித்த நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதுடன் டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம் என யோசனையை முன் வைத்தார்.

குறித்த முயற்சிக்கு யாழ் மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது.

இந்நிலையில் இன்று மத்திய கல்லூரிக்கு சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரிவித்தபோது உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.

குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த நிலையில் நீச்சல் தடாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றி விட்டு, திரை நீக்கம் செய்யமாலே விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார்.

பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் அமைச்சரை திரை நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கேட்ட போதும் அமைச்சர் அதனை மறுத்தார்.

பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னர் அதற்கேற்றவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்து அமைச்சர் வெளியேறினார்.

இதன்போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.