அபசகுனம் என்று இறந்த தாயின் உடலை வாங்க மறுத்த மகன் – பகீர் சம்பவம்!
மகன் ஒருவர் தனது தாயின் உடலை வாங்கி செல்ல மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், கோரக்பூரைச் சேர்ந்த ஷோபா தேவி என்ற பெண், நீண்டகால உடல்நலக் குறைவால் முதியோர் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.
தொடர்ந்து மகன்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, மூத்த மகன் சடலத்தை உடனடியாக வீட்டுக்குக் கொண்டுவர மறுத்துவிட்டார். முதியோர் இல்ல நிர்வாகத்திடம் மகன் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்ததாவது,
“நீங்கள் என் தாயின் சடலத்தை நான்கு நாட்களுக்கு டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள். இப்போதைக்கு வீட்டில் கல்யாண விழா நடந்து கொண்டிருக்கிறது. சடலத்தை இப்போது வீட்டுக்குக் கொண்டுவந்தால் அபசகுனமாகிவிடும்.
திருமணத்திற்குப் பிறகு நான் வந்து எடுத்துச் செல்கிறேன்.” என்றுள்ளார். எனவே, முதியோர் இல்ல ஊழியர்கள், வேறு குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டனர். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால், இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குப் பதிலாக, குடும்பத்தினர் ஷோபா தேவியின் உடலை புதைத்தனர். நான்கு நாட்களுக்குப் பிறகு சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து தகனம் செய்வதாக உறவினர்கள் கூறியதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முதியோர் இல்லத்தில் இருந்தபோது, மகன்களில் இளையவர் மட்டுமே எப்போதாவது தொலைபேசியில் அழைத்து விசாரிப்பார் என்றும், குடும்பத்தில் வேறு யாரும் அவர்களைச் சந்திக்க வந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.