;
Athirady Tamil News

இலங்கையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

0

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாலும், பல வீதிகள் மற்றும் அணுகுமுறைகள் தடுக்கப்பட்டதாலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனிதாபிமான நெருக்கடி
டித்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் குழந்தைகள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். நவம்பர் 28 ஆம் திகதி அதிகாலை கிழக்குக் கரையை கடந்து சென்ற புயல், பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளை ஏற்படுத்தி பல மாவட்டங்களை மிக மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது.

ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் படி, பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் பல பகுதிகளுக்கான அணுகுமுறை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

புயலால் குழந்தைகளும், அவர்கள் நம்பியிருந்த அத்தியாவசிய சேவைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது குறித்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். உயிரிழப்பு, சொத்து இழப்பு, இடம்பெயர்வு என துயரத்தில் உள்ள குடும்பங்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.

மிகவும் அபாயத்தில் உள்ள குடும்பங்களுக்கு உதவுவது தற்போதைய நிலைக்கு ஏற்றதாக உள்ளது. புயல் மறைந்துவிட்டதாக தோன்றினாலும், அதன் விளைவுகள் இன்னும் கடுமையாகவே உள்ளது.”

குழந்தைகளுக்கு நோய் பரவல், ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பற்ற வாழ்வு, மனஅழுத்தம் போன்ற அபாயங்களை அதிகரித்துள்ளன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவசர தேவைகளுக்காக, அரசு, தேசிய அதிகாரிகள், கூட்டாளர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து யுனிசெப் பணியாற்றி வருவதாகவும், மேலும் அவசர உதவிகளை வழங்க நிதி ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.