;
Athirady Tamil News

வெளிநாட்டில் ஜெலென்ஸ்கிக்கு உயிர் பயம் காட்டிய ட்ரோன்கள்: தீவிர விசாரணை முன்னெடுப்பு

0

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானம் டப்ளினில் தரையிறங்கியதும், திடீரென்று ட்ரோன்கள் வட்டமிட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கை
சமீபத்திய மாதங்களில் விமான நிலையங்கள் மற்றும் மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் திடீரென்று வட்டமிடுவது ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

இந்த ட்ரோன் செயல்பாடுகளுக்கு பின்னால் ரஷ்யாவின் நடவடிக்கை இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளும், ஜோ பைடன் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் அமெரிக்காவும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனை ஆதரித்து வருகிறது.

இந்த நிலையில் ஜெலென்ஸ்கியின் முதல் உத்தியோகப்பூர்வ அயர்லாந்து விஜயத்தின் போது, ட்ரோன்கள் திடீரென்று வட்டமிட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது அவருக்கு உயிர் அபாயம் ஏற்படுத்தும் நடவடிக்கையா என்பதை சிறப்பு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

பிரான்ஸில் ஜனாதிபதி மேக்ரானுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு ஜெலென்ஸ்கி அயர்லாந்து சென்றுள்ளார். இந்த நிலையில், அயர்லாந்தின் நாளேடான The Journal இந்த ட்ரோன் விவகாரத்தை விரிவாக அலசியுள்ளது.

உயிர் அச்சுறுத்தல்
ஜெலென்ஸ்கியின் விமானம் அயர்லாந்தின் கடற்கரையை நெருங்கியபோது, அந்த விமான பாதையில் பல இராணுவ பாணி ட்ரோன்கள் வட்டமிடுவதை அயர்லாந்து கடற்படைக் கப்பல் கண்டுபிடித்ததாக The Journal தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெலென்ஸ்கியின் வருகையை முன்னிட்டு அந்த நேரத்தில் டப்ளினைச் சுற்றி விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட மண்டலம் நடைமுறையில் இருந்தது. அப்படியான சூழலில் இராணுவப் பயன்பாட்டிற்கான ட்ர்ரொன்கள் வட்டமிட்டதன் பின்னணி ஆராயப்படுகிறது.

தற்போது இந்த விவகாரத்தை அயர்லாந்தின் SDU பிரிவு விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த மாத இறுதிக்குள் இந்த சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்துவதாக அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், முழுமையான விசாரணைக்கு பின்னரே, கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.