;
Athirady Tamil News

ராணுவ தளபதி குறித்து விமர்சனம்: இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்

0

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால், இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் சிறைக்குள் சென்று இம்ரான்கானை சந்தித்தார். அதன்பிறகு, சிறையில் இருந்தபடியே வெளியிட்ட அறிக்கையில் ராணுவ தளபதி அசிம் முனீரை இம்ரான்கான் கடுமையாக விமர்சித்திருந்தார். அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி, மனநிலை சரியில்லாதவர் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராணுவ தளபதி அசிம் முனீரை விமர்சித்த இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சௌத்ரி கூறியதாவது:“இம்ரான்கானின் அரசியல் ஆசைகள் மிகவும் தீவிரமானதாகிவிட்டன. தான் அதிகாரத்தில் இல்லையானால் வேறெதுவும் இருக்கக்கூடாது என்று அவர் நம்புகிறார்.

அவருக்கு தற்போது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் துரோகிகளின் மொழியில் பேசுகிறார். சிறையில் இருந்து பொதுமக்களை ராணுவத்திற்கு எதிராக இம்ரான்கான் தூண்ட முயற்சிக்கிறார்; இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. சிறையில் இம்ரான்கானை சந்திக்கும் நபர்கள் ராணுவத்திற்கு எதிராக கருத்தைப் பரப்ப பயன்படுத்தப்படுகிறார்கள். ராணுவம் ஒவ்வொரு பிரச்சினையிலும் இழுக்கப்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ராணுவத் தலைவருக்கு எதிராக இம்ரான்கான் அறிக்கைகளை வெளியிடுகிறார். பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம்,” இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.