மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை – ஜனாதிபதி
அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.
வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதேவேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.