தீவிரமடையும் போராட்டம்: ஈரானில் இணையதளம் முடக்கம்
ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிரமடைந்துவரும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் அந்த நாட்டு அரசு இணையதள இணைப்பை முடக்கியுள்ளது.
இது குறித்து ஈரான் தொலைத்தொடா்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது:
போராட்டங்களைத் தூண்டுவதற்காக அந்நிய சக்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. அதைத் தடுப்பதற்காக இணையதள இணைப்பு தற்காலிகமாக முடக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
இதையடுத்து, பெரும்பாலான சமூக ஊடகங்கள், செய்தி இணையதளங்கள் யாரும் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைநகா் டெஹ்ரான், இஸ்ஃபஹான், ஷிராஸ், தப்ரிஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் தொடா்ந்தன. போலீஸாா் கண்ணீா்ப்புகை குண்டுகள், ரப்பா் குண்டுகள் பயன்படுத்தி ஆா்ப்பாட்டக்காரா்களைக் கலைத்தனா்.
இந்தப் போராட்டங்களில் இதுவரை 20 போ் உயிரிழந்ததாகவும், 800-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ரியால் மதிப்பு சரிவு, உணவுப் பொருள்கள் விலை உயா்வு காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள் அரசுக்கு எதிரான அரசியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. ‘கமேனியே பதவி விலகு’, ‘சுதந்திரம் வேண்டும்’ என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கலவரக்காரா்களை ஒடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். அதன் தொடா்ச்சியாக இணையதள இணைப்பு தற்போது முடக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.