சிரியா: குா்துக்களிடமிருந்து தப்கா நகரம் மீட்பு! அரசுப் படைகள் அதிரடி முன்னேற்றம்!
சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினா் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.
இதன்மூலம், தப்கா நகரில் உள்ள ராணுவ விமான தளம் மற்றும் தெற்கு சிரியாவின் நீா்விநியோகத்துக்கு மிகவும் முக்கியமான அணை ஆகியவற்றை அரசுப் படைகள் மீட்டுள்ளன. அலெப்போ நகரைக் கைப்பற்றுவதில் இம்மாத தொடக்கத்தில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 23 போ் உயிரிழந்த நிலையில், தற்போது அரசுப் படைகள் ரக்கா நகரை நோக்கி முன்னேறி வருகின்றன.
தப்கா நகரில் அரசுப் படைகளின் வருகையைத் தாமதப்படுத்த, அங்கிருந்த பாலத்தை எஸ்டிஎஃப் தகா்த்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, தப்காவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளை எஸ்டிஎஃப் சுட்டுக் கொன்ாகச் சிரிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்த எஸ்டிஎஃப், அரசுப் படைகள்தான் சிறை மீது தாக்குதல் நடத்தின என்று தெரிவித்துள்ளது
இதேபோல், டெய்ா் எல்-சோா் மாகாணத்திலும் எஸ்டிஎஃப் பின்வாங்கியதைத் தொடா்ந்து, அங்குள்ள பல கிராமங்களை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. அமைதிப் பேச்சுவாா்த்தைக்காக இரு தரப்புக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ள போதிலும், ரக்கா மாகாணத்தில் அரசுப் படைகள் முன்னேறி வருவது போா்ச்சூழலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆட்சியில் இருந்தபோது குா்து பகுதிகள் எஸ்டிஎஃப் கட்டுப்பாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தி அவரின் அரசைக் கவிழ்த்த தற்போதைய இடைக்கால அதிபா் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு, எஸ்டிஎஃப் வசமுள்ள பகுதிகளை மீண்டும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.