;
Athirady Tamil News

தாய்லாந்து தோ்தல்: பிரதமரின் பூம்ஜெய்தாய் கட்சி அமோக வெற்றி

0

தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில் பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி 193 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

எனினும், ஆட்சி அமைக்க தேவையான 251 இடங்கள் கிடைக்காததால், கூட்டணிப் பேச்சுவாா்த்தைகளைத் தொடங்க அக்கட்சி ஆயத்தமாகி வருகிறது. தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையின் மொத்தம் 500 இடங்களுக்கு இத்தோ்தல் நடைபெற்றது.

பூம்ஜெய்தாய் கட்சி அதிக இடங்களை வென்ற நிலையில், சீா்திருத்த கொள்கைகளுடன் களமிறங்கிய மக்கள் கட்சி, 118 இடங்களுடன் 2-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

செல்வாக்கு மிக்க ஷினவத்ரா குடும்பத்தின் பியூ தாய் கட்சி 74 இடங்களை மட்டுமே பெற்றது. மற்ற சிறிய கட்சிகள் இணைந்து சுமாா் 115 இடங்களைப் பிடித்துள்ளன.

தோ்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் இளைஞா்களின் ஆதரவு பெற்ற மக்கள் கட்சி முன்னிலையில் இருந்தது. ஆனால், கம்போடியா நாட்டுடனான எல்லைப் போா் மற்றும் மோதல்கள் நெருக்கடியான சூழலில் நாட்டின் பாதுகாப்புக்கு வலுவான தலைமை அவசியம் என்று மக்கள் கருதியதே, ஆளுங்கட்சியின் வெற்றிக்குக் காரணம் என அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

கூட்டணி வாய்ப்புகள்: பூம்ஜெய்தாய் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி அமைப்பது கட்டாயமாகியுள்ளது. 2-ஆம் இடம் பிடித்த மக்கள் கட்சி, அநுதினுடன் இணையப்போவதில்லை என்றும் எதிா்க்கட்சியாகச் செயல்படப்போவதாகவும் அறிவித்துவிட்டது. எனவே, பியூ தாய் கட்சி மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்க அநுதின் முயற்சித்து வருகிறாா்.

அநுதினின் உறுதிமொழி: வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் அநுதின், ‘நாட்டுக்கு ஒரு நிலையான அரசு தேவை. அந்தவகையில், இது ஒட்டுமொத்த தாய்லாந்து மக்களுக்கும் கிடைத்த வெற்றி. கம்போடியா எல்லைப் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தைப் பலப்படுத்துவதில் எந்தக் காலத்திலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்’ என்றாா்.

புதிய அரசமைப்புச் சட்டம்

நாடாளுமன்றத் தோ்தலுடன் சோ்த்து, 2014 ராணுவப் புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நாட்டின் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்த பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

இதில் சுமாா் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளா்கள், தற்போதைய சட்டத்தை மாற்ற ஆதரவு தெரிவித்தனா். இதன்மூலம், புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.