யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை அவ்வீதியூடாக சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றினை வழிமறித்துள்ளனர்.
குறித்த வாகனம் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த போது , வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அதனை அடுத்து வாகனம் நிறுத்தப்பட்ட போது , வாகனத்தினுள் இருந்த சிறுவன் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளான். அவனை உடனடியாக மீட்டு , பொலிஸார் யாழ் . போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்த போதிலும் , சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
அதேவேளை வாகனத்தினுள் இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவர்கள் என்ன நோக்கத்திற்காக அதிகாலை வேளை ஊர்காவற்துறை நோக்கி பயணித்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு குற்ற பின்னணிகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.