;
Athirady Tamil News

பிரிட்டன், கனடா பயணிகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி

0

பெய்ஜிங்: ‘பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு குடிமக்கள், இனி விசா (நுழைவுஇசைவு) இல்லாமலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்’ என்று சீன அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

சுற்றுலா, வா்த்தகம், கல்வி தொடா்பான திட்டங்கள் அல்லது உறவினா்களைச் சந்திப்பது போன்ற காரணங்களுக்காகச் செல்பவா்கள், சீனாவில் 30 நாள்கள்வரை விசா இன்றி தங்கலாம். இந்தப் புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை (பிப். 17) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணங்களைத் தொடா்ந்து, அந்த நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சீனா இந்த விசா சலுகையை வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், சீனாவுக்கு விசா இன்றி செல்ல அனுமதி பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை தற்போது 79-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் சீனாவுக்கான விசா பெறும் நடைமுறை மிகவும் கடினமானதாகக் கருதப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளுடனான தனது தொடா்பை வலுப்படுத்த, சீனா தனது விசா விலக்குத் திட்டத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.