;
Athirady Tamil News

திலீபன் சிலை அகற்றுவதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை: அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

0
யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, மக்களிடையே பிளவுகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென்னிலங்கையில் அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள சில தரப்பினர் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக இன, மத உணர்வுகளைத் தூண்டும் அரசியலை சிலர் மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
வெடுக்குநாறி மலை, கன்னியா நீரூற்று, மயிலத்தமடு–மாதவனை உள்ளிட்ட விவகாரங்களைப் பயன்படுத்தி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதுடன், மலையகத்திலும் இன முரண்பாடுகளை உருவாக்கக்கூடிய அரசியலை சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சிறு சம்பவங்களைக் கூட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அவதூறுகளைப் பரப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த தேர்தலில் வடக்கில் வாழும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய மக்கள் ஆணையை ஏற்றுக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள், மக்களிடையே மீண்டும் இனவாத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இதன்போது, தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
சிலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதா, அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அதனைத் தொடர்வதற்கான அல்லது அகற்றுவதற்கான தீர்மானத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பன தொடர்பான உரிய நடவடிக்கைகளை யாழ்ப்பாண மாநகரசபையே முன்னெடுக்க வேண்டியிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாநகரசபை மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததன் காரணமாக, பொலிஸார் தமது சட்டரீதியான பொறுப்பின் அடிப்படையில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பொலிஸாருடைய வேலையைப் பொலிஸார் செய்திருக்க வேண்டும், மாநகரசபையினுடைய வேலையை மாநகரசபை செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கு இரண்டு விடயங்களும் தலைகீழாக நடைபெற்றுள்ளன. அதன் விளைவாகவே திலீபனின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பாக என்ன நடந்துள்ளது என்பது குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தீர்மானத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.