;
Athirady Tamil News

சீன தொழிலதிபருடன் ரகசிய சந்திப்பு: பெரு அதிபர் ஜோஸ் ஜெரி பதவி நீக்கம்

0

சீன தொழிலதிபருடன் ரகசிய சந்திப்பு நடத்திய குற்றச்சாட்டில், பெரு நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீன தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை ஜோஸ் ஜெரி இரவு நேரத்தில் ரகசியமாகச் சந்தித்தது தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையானது. இதையொட்டி, ஜோஸ் ஜெரிக்கு எதிராக பெரு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், அவருக்கு எதிராக 75 வாக்குகளும், ஆதரவாக 24 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, அவர் பதவியை இழந்தார்.

கடந்த அக்டோபரில், ஊழல் புகாரால் முன்னாள் அதிபர் தினா போலுவார்டே பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத் தலைவராக இருந்த ஜோஸ் ஜெரி அதிபராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய அதிபர் தேர்வு: பெருவில் வரும் ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தலைவர் ஃபெர்னாண்டோ ரோஸ்பிக்லியோசி இடைக்கால அதிபர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால், நாடாளுமன்றம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்றும், அவரே நாட்டின் புதிய இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில், இது கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள எட்டாவது ஆட்சி மாற்றமாகும். இத்தகைய அரசியல் ஸ்திரமின்மை நிலவினாலும், நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீத வளர்ச்சியில் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.