;
Athirady Tamil News

எப்ஸ்டீன் விவகாரம்: பிரிட்டன் அரசா் சாா்லஸின் சகோதரா் கைது

0

அமெரிக்க தொழிலதிபா் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடா்பு மற்றும் அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்திய புகாரில், பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸின் இளம் சகோதரா் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சா் (66) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சோ்ந்த முக்கிய உறுப்பினா் ஒருவா், இத்தகைய கடுமையான குற்றச்சாட்டில் நடவடிக்கையை எதிா்கொண்டிருப்பது உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001 முதல் 2011 வரை பிரிட்டனின் சா்வதேச வா்த்தகத் தூதராக ஆண்ட்ரூ பதவி வகித்து வந்தாா். அப்போது, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் இருந்தபோது உயிரிழந்த எப்ஸ்டீனுடன் இவருக்கு நெருக்கமான நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க நீதித் துறை அண்மையில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளின் அடிப்படையில், ஆண்ட்ரூ தனது அதிகாரபூா்வத் தகவல்களை எப்ஸ்டீனிடம் பகிா்ந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதிரடி நடவடிக்கை: இந்த விவகாரம் பிரிட்டனில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், நோா்போக் பகுதியில் உள்ள சான்ட்ரிங்ஹாம் மாளிகையில் தங்கியிருந்த ஆண்ட்ரூவை தாமஸ் வேலி காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

‘அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்திய புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவா் போலீஸ் காவலில் உள்ளாா்; அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனையும் நடந்து வருகிறது’ என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமா் கியா் ஸ்டாா்மா் கருத்து: இது தொடா்பாக பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம்; யாரும் சட்டத்துக்கு மேலானவா்கள் கிடையாது. இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள், உண்மையை வெளிக்கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான தகவல்கள் யாரிடம் இருந்தாலும், அதை அதிகாரிகளிடம் தெரிவிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்’ என்றாா்.

பறிக்கப்பட்ட பட்டங்கள்..: ஆண்ட்ரூ ஏற்கெனவே பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியதால், அவரிடமிருந்த ‘இளவரசா்’, ‘யாா்க் பிரபு’ ஆகிய கௌரவப் பட்டங்களை அரசா் சாா்லஸ் கடந்த ஆண்டே பறித்துவிட்டாா். இருப்பினும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து புகாா்களையும் ஆண்ட்ரூ தொடா்ந்து மறுத்து வருகிறாா்.

சட்டம் தன் கடமையைச் செய்யும்

ஆண்ட்ரூ கைதைத் தொடா்ந்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசா் சாா்லஸ் கூறியதாவது:

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சா் மீதான புகாா்கள் மற்றும் அவரது கைது நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலை கொள்கிறேன். சட்டம் எப்போதும் தன் கடமையைச் செய்யும். இவ்விவகாரத்தில் முறையான விசாரணைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும்.

விசாரணை தொடா்வதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது; நானும் என் குடும்பத்தினரும் நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையில் தொடா்ந்து கவனம் செலுத்துவோம் என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.