;
Athirady Tamil News

ஐதராபாத்தில் பயங்கரம்: பெண் ஐ.டி. ஊழியர் கொடூர கொலை: முதல் கணவர் ஆத்திரம்

0

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (வயது 29) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கணவன் – மனைவி இருவரும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடி வீட்டில் வசித்து வந்தனர். சுனிதா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று சுனிதா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த வாலிபர் சுனிதாவின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத சுனிதா கூச்சல் போட முயன்றார். உடனே அந்த வாலிபர் கத்தி மற்றும் அரிவாளால் சுனிதாவை சரமாரியாக குத்தி வெட்டினார். அருகில் இருந்த பூந்தொட்டியை கொண்டும் சுனிதாவின் மீது போட்டார்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சுனிதா துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்த குளியல் அறைக்குள் சென்று பதுங்கிகொண்டார். சத்தம் கேட்டு வீட்டு மாடியில் இருந்து சுனிதாவின் மாமியார் ஓடி வந்தார்.

அங்கு சுனிதா கொடூரமாக கொலை செயப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதார். மேலும் கொலையாளி வீட்டு குளியல் அறையில் பதுங்கி இருப்பதை அறிந்ததும் பதறினார். இந்த தகவல் அறிந்த குடியிருப்பு மக்கள் அங்கு ஓடி வந்தனர்.

நடந்த விவகாரம் குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குளியல் அறை கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அங்கு மர்ம நபர் ரத்தம் வழிந்த அரிவாள், கத்தியுடனும், பெட்ரோல் கேனுடனும் நின்று கொண்டிருந்தார்.

போலீசார் அதிரடியாக செயல்பட்டு மர்ம நபரை மடக்கி கைது செய்தனர். போலீசார் உடனடியாக அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பிடிபட்டவர் பெயர் மகேஷ் மும்பையை சேர்ந்தவர். இவர் சுனிதாவின் முதல் கணவர் ஆவார்.

மகேஷ் கனடாவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சுனிதாவுக்கும் 2022-.ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் கணவன் – மனைவி இருவருமே கனடாவுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சுனிதாவை மகேஷ் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சுனிதா இந்தியா திரும்பினார். பின்பு மகேஷ் மீது போலீசில் புகார் செய்தார். மேலும் விவாகரத்து கேட்டும் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு அவர்களுக்கு கோர்ட்டு விவகாரத்து வழங்கியது.

அதன்பிறகு மகேஷ் கனடாவுக்கு சென்றுவிட்ட நிலையில் சுனிதா தன்னுடன் வேலை செய்த ஸ்ரீநாத்தை மறுமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மகேஷின் தாயார் இறந்துவிட்டார். அதற்கான இறுதி காரியங்கள் செய்ய மகேஷ் நாடு திரும்பினார். தாயாருக்கு இறுதி சடங்குகள் செய்த அவர் சுனிதா போட்ட வழக்குகளால் மன உளைச்சலில் தான் தனது தாயார் இறந்ததாக கருதினார்.

மேலும் சுனிதா தொடர்ந்த வழக்கு காரணமாக கனடாவுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேதனையில் இருந்த மகேசுக்கு சுனிதா மறுமணம் செய்த தகவல் கிடைத்தது.

தனது வாழ்க்கையை கெடுத்துவிட்டு சுனிதா மகிழ்ச்சியாக இருக்கிறாரே என்று ஆத்திரம் அடைந்தார். சுனிதாவை கொலை செய்ய திட்டமிட்டார். சுனிதா எங்கு இருக்கிறார் என்பது மகேசுக்கு தெரியவில்லை இதையடுத்து அவரது முகவரியை பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுனிதாவின் சமூக வலைதள கணக்கினை வைத்து அவர் ஐதராபாத்தில் இருப்பதை மகேஸ் அறிந்தார்.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் சுனிதாவின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். சுனிதா வேலைக்கு செல்வதையும் அவர் வீட்டுக்கு வரும் நேரத்தையும் நோட்டமிட்டார்.

நேற்று மதியம் கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரு கேனில் பெட்ரோல் பிடித்து கொண்டு 4-வது மாடியில் உள்ள சுனிதா வீட்டிற்கு சென்றார். கதவை தட்டியபோது சுனிதா கதவை திறந்தார். உடனடியாக கதவை உள் பக்கமாக பூட்டிய மகேஷ் தன்னிடம் இருந்த சுத்தியலால் சுனிதாவின் தலையில் பலமாக தாக்கினார். பின்னர் அவரை குத்தி கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் அவரது உடலை அங்கேயே எரிக்கும் நோக்கில் பெட்ரோல் கேனை திறந்தார். அந்த வேளையில் சத்தம் கேட்டு சுனிதாவின் மாமியார் வந்ததால் அங்குள்ள குளியல் அறைக்குள் பதுங்கினார் மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மகேஷிடம் இருந்து கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள், பெட்ரோல் கேன், துளையிடும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. சுனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஐதராபாத்தில் ஐ.டி. பெண் ஊழியரை அவரது முன்னாள் கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.