;
Athirady Tamil News

சிறுவர்களுக்கு ஒளிமயமான வாழ்வை உருவாக்கி கொடுப்பது – எம் அனைவரதும் பொறுப்பாகும்: வடக்கு மாகாண ஆளுநர்

0
சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண நிர்வாகம் தனது முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேற்படி திணைக்களத்தின் ஆணையாளர்  சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணம் மிக நீண்ட காலமாகப் போரின் தாக்கங்களை எதிர்கொண்டதொரு மாகாணமாகும். எனவே, இங்குள்ள சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பல சிறுவர்கள் தமது தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த நிலையில் வாழ்கின்றனர். ஏனைய சிறுவர்களை விட இவர்களுக்கான தேவைப்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகவும் விசேடமானவை. இன்றும் பல சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். சமூகத்தில் பல சிறுவர்களுக்கு எமது உதவிகள் தேவைப்படுகின்றன. வறுமை காரணமாக எந்தவொரு சிறுவனும் தனது கல்வியை இழந்துவிடக் கூடாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் அதீத அக்கறை கொள்ள வேண்டும்.

மேலும், சிறுவர்களை இலக்கு வைத்து சமூகப் பிறழ்வுகள் அதிகரித்து வரும் தற்காலச் சூழலில், அது தொடர்பில் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமானது. வலியுறுத்திய ஆளுநர், எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.