மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்க உடனடி நடவடிக்கை
video link-
மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கான சுகாதார சேவைகளை வினைத்திறனாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.
மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (14) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், மல்வத்தை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எல்.குடாபடு மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, வைத்தியசாலையில் தற்போது நிலவும் அத்தியாவசியத் தேவைகள், ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவையில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதனையடுத்து, வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் விஜயம் செய்த பணிப்பாளர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்ததுடன், வைத்தியசாலை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான மற்றும் அவசரத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.
வைத்தியசாலையின் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வரும் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையை பணிப்பாளர் இதன்போது பாராட்டினார்.