;
Athirady Tamil News

எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை

0

இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவை ’24/7′ அடிப்படையில் (நேரம் பாராது) இயங்கி வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நம்பகமான விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மசகு எண்ணெய் மற்றும் டீசல் விநியோகத்திற்காக ஏற்கனவே இரண்டு முகவர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், இறுதி உடன்படிக்கையில் கையெழுத்திடும் தருணத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

தற்போதைய உலகளாவிய சூழலில், கடலில் பயணிக்கும் எரிபொருள் தாங்கிக் கப்பல்களை அணுகி, அதிக விலை கொடுத்துக் கொள்வனவு செய்யும் ஒரு போட்டி நிலை உருவாகியுள்ளதால் இந்தத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடியைக் கையாளும் பொருட்டு, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு தனது வழமையான நடைமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

வாரத்திற்கு ஒருமுறை கூடிய இக்குழு, தற்போது தேவைப்படின் ஒரே நாளில் இரண்டு தடவைகள் கூடி அவசர முடிவுகளை எடுத்து வருகின்றது. தரம் மற்றும் கொடுப்பனவு விதிமுறைகளைச் சரிபார்த்த பின்னரே தொழில்நுட்பக் குழுவிற்கு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசலைப் பெற்றுக்கொள்வதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றாலும், மசகு எண்ணெய் விநியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை கூட்டுத்தாபனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் 26 மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வரவேண்டிய மசகு எண்ணெய் கப்பல்கள் வருகை தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ‘உலை’ எண்ணெய் தயாரிப்பது பாதிக்கப்படலாம் என்பதால், மேலதிக டீசல் மற்றும் ஒரு தொகுதி ‘உலை’ எண்ணெயை நேரடியாகக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஒரு டீசல் கப்பல் எரிபொருளை இறக்கியுள்ளதோடு, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கான ஒரு கப்பலும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கான 92 ரக பெட்ரோல் கப்பல் ஒன்றும் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.