அனுமதியின்றி இயங்கும் கடலட்டை பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது
இலங்கையின் கடலட்டைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது.
திணைக்களங்கள் சில விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக உள்ள நிலையில், இந்த ஒழுங்குமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்குப் பண்ணையாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
கடலட்டை வளர்ப்புக்கு வடக்கு மாகாணம் மிகவும் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டுள்ளமையால், அதற்கான காணிகளை அடையாளப்படுத்தும் வீதி வரைபடத்தை விரைவாகத் தயாரிக்க வேண்டும்,
ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காணிகளை முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்த வேண்டும், இவற்றில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.