;
Athirady Tamil News

எரிபொருள் நெருக்கடி! பாகிஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்!

0

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தானில் நேற்று முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை வழியாக எரிபொருள் சரக்கு கப்பல்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அலுவலக வேலை நாள்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இருப்பினும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நீடித்து வருவதால், பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் திங்கள்கிழமை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்துக்கு பிறகு பொதுமுடக்கம் தொடர்பான அறிவிப்பை ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”பெட்ரோலியப் பொருட்கள், எரிசக்தி பொருள்களை சேமிக்கும் வகையில், பஞ்சாப், கைஃபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், இஸ்லாமாபாத், கில்கித்-பால்டிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகள், கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்களை இரவு 8 மணிக்கு மூடப்படும்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோட்டத் தலைமையிடங்களில் அமைந்துள்ள சந்தைகள், கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் மட்டும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களை விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் அனைத்து வகையான வணிக வளாகங்களும் இரவு 8 மணிக்கே மூடப்படும்.

டீக்கடைகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவை இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். மருந்துக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

இந்த கட்டுப்பாடு நேற்று (ஏப்ரல் 7) இரவு முதல் மறுஅறிவிப்பு வரும்வரை அமலில் இருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.