;
Athirady Tamil News

மத்திய முகாம் வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு

0
video link-

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், CIC விவசாய வர்த்தக நிறுவனத்தின் சமூக நலத் திட்டத்தினூடாக திருத்தி அமைக்கப்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி, செவ்வாய்க்கிழமை (21) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் இசுறு கொடிக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் CIC வர்த்தக நிறுவன பணிப்பாளர் வரூண மதவன ஆராச்சி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு விடுதியினைத் திறந்து வைத்தனர்.

மிக நீண்டகாலமாக சேதமடைந்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பழமையான விடுதிக் கட்டிடம், CIC நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத்துறையினர், அரச நிறுவனங்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரினதும் முழுமையான ஒத்துழைப்புடன் திருத்தியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன், கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அம்பாறை மத்திய முகாம் என்பது மூன்று இன மக்களும் வாழும் ஒரு கிராமம்.பிரதேசத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த மகப்பேற்று விடுதி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளமை, இப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதற்காக உழைத்த சகல தரப்பினருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.