;
Athirady Tamil News

ஈரானுடன் பேச்சுவார்த்தை: வெள்ளிக்கிழமைக்குள் நல்ல செய்தி: டிரம்ப்

0

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடங்கின. இரு தரப்பினரும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா–ஈரான் இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது தோல்வியடைந்ததால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு, ஈரான் கப்பல்களை தடுத்து வருகிறது. மேலும், ஈரான் கப்பல் ஒன்றை அமெரிக்கா பறிமுதல் செய்தது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை மற்றும் கப்பல் பறிமுதல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஈரான், பாகிஸ்தானில் நடைபெற இருந்த 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்தது.

இதற்கிடையே, 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்தது. இதை நீட்டிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பே தெரிவித்திருந்தார். மேலும், ஈரானுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை தொடங்குவோம் என்றும் எச்சரித்தார்.ஆனால், அந்த முடிவை திடீரென மாற்றிய டிரம்ப், ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஈரான் பங்கேற்க மறுத்ததாலும், போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதாலும், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. ஈரானும் அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது தாக்குதலும் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமைக்குள் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக நல்ல செய்தி வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.