;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி; 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது

0

புளோரிடா

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

தொடர்ந்து, ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. தொடர்ந்து, ஈரானின் உள்ளே செல்லும் மற்றும் வெளியே வரும் கப்பல்களை முடக்கும் வகையில் அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டு வருகின்றன.

அமெரிக்கா-ஈரான் போருக்கு முன்பு வரை சராசரியாக தினமும் 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்லும். ஆனால், கடந்த 24 மணிநேரத்தில் எந்த கப்பலும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே பயணிக்கவில்லை என கடல்சார் போக்குவரத்துக்கான அமைப்பு நேற்று தெரிவித்து இருந்தது.

ஹார்மூஸ் ஜலசந்தியில், போருக்கு முன்பிருந்த போக்குவரத்து நிலை திரும்ப வேண்டும் என கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை தூதர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு படை இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்க கடற்படையின் செயல்பாடுகள் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ளன. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 20-க்கும் மேற்பட்ட போர் கப்பல்களை பணியில் ஈடுபடுத்தி வருகிறோம் என தெரிவித்து உள்ளது. அவை ஈரானை முற்றுகையிட்டு வருகின்றன.

இதன்படி, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் 61 கப்பல்களை இன்று திருப்பி அனுப்பி உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியில் முற்றுகையின் ஒரு பகுதியாக 4 கப்பல்களை செயலிழக்க செய்துள்ளோம் என்றும் தெரிவித்து இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.