;
Athirady Tamil News

நாட்டில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை ; மீனவர்களுக்கு விசேட எச்சரிக்கை

0

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், தென்மேற்கு பருவமழை நிலை நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் படிப்படியாகச் செயல்பட்டு வருவதால், அப்பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மரங்கள் முறிவடைதல், மின்தடை மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்த்தேக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மழை காரணமாக மலைச்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை அறிக்கைகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க திறந்த வெளிகளில் தங்குவதைத் தவிர்க்கவும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் மரங்களின் கீழ் நிற்காமல் இருக்கவும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.