சுகாதாரத் துறையில் ஊழியர் பற்றாக்குறை; உள்ளீர்க்கப்படவுள்ள 3,000 தாதியர்
நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் நோக்கில், முதற்கட்டமாக 3,000 மாணவத் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள், தாதிகள் சேவைக்கு 13,600 பணியாளர்களைப் புதிதாக இணைத்துக் கொள்ளும் ஐந்து வருடத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்கள்
இதன்படி 2021, 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கடந்த மே மாதம் 29 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பங் கோரல், ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் தாதிகள் சேவைக்காகத் தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் மாணவத் தாதிகளுக்கான தொழில்முறைப் பயிற்சிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ், 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த 13,600 தாதிகள் நியமனக் கொள்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.