;
Athirady Tamil News

தீயில் எரிந்த ஹொரண முதியோர் இல்லம் தொடர்பில் அதிர்ச்சிதரும் தகவல்கள்!

0

12 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட அந்த இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (4) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மனிதர்கள் எழுப்பிய மரண ஓலச் சத்தம்
இந்த நிலையில் அ்ங்குருவாதொட்ட, படகொட கல்பாத்த ‘மவ்பிய செவண’ முதியோர் இல்லம் தொடர்பில் அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் படி, அந்த இல்லத்தில் மனநலக் குறைபாடுகள் கொண்ட பல்வேறு வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 72 பேர் இருந்தமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகையினரைப் பராமரிப்பதற்காக நிர்வாகத் தரப்பில் ஐந்து பேர் இருந்துள்ளணர். சம்பவம் தொடர்பில் தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத, இந்த சம்பவத்தை முதன்முதலில் நேரில் கண்ட பிரதேசவாசி ஒருவர் கூறுகையில்,

“நாங்கள் இதற்கு முந்தைய நாள் இந்த இல்லத்தில் உள்ள 72 பேருக்காகத் தானம் (உணவு) கொண்டு வந்திருந்தோம். சம்பவம் நடக்கும் போது நான் இங்கு வரும் போதே தீப்பரவல் ஏற்பட்டு 5 அல்லது 10 நிமிடங்கள் கடந்திருந்தது.

சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைத்திருப்பார்கள்.
முன் பக்கக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டிடப்பட்டிருந்தன. முன் பக்கமாக ஒருவர் தவித்துக் கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இந்த இல்லத்தின் தரையில் மெத்தைகளைப் போட்டே இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த நேரத்தில் மனிதர்கள் எழுப்பிய மரண ஓலச் சத்தம் இன்னும் காதுகளில் ஒலிப்பது போலவே இருக்கின்றது. நடக்க முடியாத மூவர் முன் பகுதியிலேயே இருந்தனர். எனது கூச்சலைக் கேட்டுச் சுற்றியிருந்தவர்களும் ஓடி வந்தனர்.

நாங்கள் பின்புறமாகச் சென்று மிகக் கடினமான முயற்சியின் மத்தியிலேயே ஏழு அல்லது எட்டுப் பேரைக் காப்பாற்றினோம்.

அந்த நேரத்திலும் கூட அண்மிக்க முடியாத அளவுக்குத் தீப் பிளம்புகள் எரிந்து கொண்டிருந்தன. நாங்கள் காப்பாற்றி முற்றத்துக்கு அழைத்து வந்த ஒரு தாய், ‘அய்யோ எனது மாலை வீட்டிற்குள் விழுந்துவிட்டது’ என்று கூறிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடினார். அவரும் தீயில் கருகிப் போனார்.

எரிவாயு கொள்கலனும் பின்னர் வெடித்திருந்தது.” இந்த சம்பவத்தில் உயிரிழந்த 25 வயதுடைய தனுஷ்கி சஷி என்ற யுவதியின் உறவினர் ஒருவர்,

“நாங்கள் அம்பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். பேஸ்புக்கில் இதைப் பார்த்துவிட்டே எங்களது அக்காவின் மகளை இங்கு ஒப்படைத்தோம். அக்கா வெளிநாடு சென்றிருந்த காரணத்தினால். மாதத்துக்கு முப்பத்தையாயிரம் ரூபாய் நாங்கள் இங்கு செலுத்துகின்றோம்.

இதற்கு மேலதிகமாக, மருந்து எடுப்பதற்கு என்று கூறி அவர்கள் கேட்கும் நேரங்களிலெல்லாம் இருபதாயிரம், முப்பதாயிரம் என கேட்கும் தொகைகளைக் கொடுக்க வேண்டும். நாங்கள் அவரைப் பார்க்க வருவதாக இருந்தால் இவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து அனுமதி பெற்றுக்கொண்டே வர வேண்டும்.

அப்போது நன்றாகக் குளிப்பாட்டித் தூய்மையாக வைத்திருப்பார்கள். இல்லையெனில், மற்றைய நாட்களில் எந்தவொரு தூய்மையும் இருக்காது. சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைத்திருப்பார்கள்.

இவர்கள் செய்வது என்னவென்றால், இயலாதவர்களை ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு, ஓரளவிற்குப் பேசவும் நடக்கவும் கூடியவர்களை வெளியே அழைத்து வந்து காணொளி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுப் பணம் சம்பாதிப்பதுதான்.” சம்பவம் நடக்கும் போது இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அங்கு இருக்கவில்லை என்பதுடன், இந்த இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள இருமாடி வீடு ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததாகப் பிரதேசவாசிகள் மிகுந்த ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, மருத்துவர் ஒருவர், தாதி ஒருவர், நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட மனநல நோயாளர்களைப் பராமரிக்கும் இவ்வாறானதொரு நிறுவனத்தை நடத்திச் செல்வதற்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளும் இந்த நிறுவனத்துக்குள் இருக்கவில்லை என்றும் பிரதேசவாசிகள் கடும் கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.